சென்னை: விடுதியில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக பயிற்சி மருத்துவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மருத்துவ துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கி உள்ள பயிற்சி மருத்துவர்கள் சிலர் கஞ்சா உள்பட பல்வேறு வகையான போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் மாணவர் விடுதியில் திடீர் சோதனை மேற்கொண்டார்.
அப்போது, அங்கு தங்கி இருந்த பயிற்சி மருத்துவ மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில் டீன் புகார் அளித்தார்.
இதையடுத்து, விடுதிக்குச் சென்ற போலீஸார், அங்கு போதைப் பொருள் பயன்படுத்தியதாக பயிற்சி மருத்துவர்கள் தருண், ஜெயந்த், சஞ்சய் ரத்தினவேல் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். அவர்களது அறையிலிருந்து 149 கிராம் கஞ்சா மற்றும் வலி நிவாரணிக்காக மருத்துவ துறையில் பயன்படுத்தும் 4 கேட்டமைன் மருந்து குப்பிகளைக் கைப்பற்றினர்.
மேலும், இவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக சென்னை சின்னமலை பகுதியில் வசிக்கும் ரோட்னி ரோட்ரிகோ(25) என்பவரையும் கைது செய்தனர். இவரிடமிருந்து 1,250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பிபிஏ பட்டதாரியான ரோட்ரிகோ, தனியார் டெலிவரி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் தன்னுடைய நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமான மென்பொறியாளரிடம் ஒரு கிலோ கஞ்சாவை ரூ.30 ஆயிரத்துக்கு வாங்கி அதை சிறு பொட்டலங்களாக்கி ரூ.60 ஆயிரத்துக்கு விற்று வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இவரது பின்னணியில் உள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பல் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்