சென்னை: தூய்மை பணியாளரை மிரட்டி வாங்கப்பட்ட கடன் பத்திரத்தை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை கொருக்குப்பேட்டை, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கொண்டைய்யா (58). சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் பணத் தேவைக்காக கடந்த 15 ஆண்டுகளாக கொருக்குப்பேட்டை சிகரந்தபாளையத்தைச் சேர்ந்த முருகன் (45) என்பவரிடம் சிறுக, சிறுக வட்டிக்கு பணம் வாங்கி, திருப்பி செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் முருகன், கொண்டைய்யாவிடம் வாங்கிய பணத்திற்காக அதிக வட்டி (கந்து வட்டி) தொகையையும் சேர்த்து ரூ.14 லட்சம் தர வேண்டும் என மிரட்டி கடன் பத்திரம் எழுதி வாங்கியுள்ளார். மேலும் கொண்டையாவிடம் அவரது வங்கி புத்தகம், ஏடிஎம்கார்டு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் முருகன் வாங்கி வைத்துள்ளார்.
அந்த ஆவணங்கள் மூலம் கொண்டைய்யாவின் வங்கிக் கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமல் கடந்த மாதம் ரூ.3 லட்சத்தை எடுத்துள்ளார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த கொண்டைய்யா இதுதொடப்பாக புகார் தெரிவித்தார். அதன்படி, ஆர்.கே நகர் போலீஸார் விசாரித்தனர்.
இதில், மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த முருகன் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.