மதுரை: மதுரை திருநகர் பகுதியில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் 21 ஆண்டுக்கு பிறகு தொடர்புடைய நபரை போலீஸார் கைது செய்தனர். தனிப்படையினரை காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டினார்.
மதுரை திருநகர் 7-வது ஸ்டாப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாத்தியம்மாள். இவர், கடந்த 2004-ல் ஒரு நாள் அதிகாலையில் வீட்டு வாசலில் வழக்கம் போன்று கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அவ்வழியாக டூவீலரில் சென்ற இருவர் வழிப்பறி செய்துகொண்டு தப்பியோடினர்.
இது தொடர்பாக திருநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து திருடர்களை தேடினர். இவ்வழக்கில் தொடர்புடைய மதுரை யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்த விஜி என்பவர் சம்பவம் நடந்த சில நாளில் கைது செய்யப்பட்டார். மேலும், இவ்வழக்கில் 2-வது நபரான நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாதங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுடலை முத்து (40) என்பவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆய்வாளர் சசிபிரியா அறிவுரையின்படி, காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையில் செந்தில், ராஜராஜன் அடங்கிய தனிப்படையினர் சுடலை முத்துவை 21 ஆண்டுக்குப் பிறகு கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். 21 ஆண்டுக்கு பிறகு வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த தனிப்படையினரை காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டினார்.