சென்னை: கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிவந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தி.நகரில் உள்ள பிரபலமான ஜவுளிக்கடையில் திருடியபோது சிக்கிய இவர் மீது 21 திருட்டு வழக்குகள் உள்ளன.
சென்னை ஆவடி, பருத்திப்பட்டு, லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ராமு (33). இவர் நேற்று முன்தினம் தி.நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபலமான ஜவுளிக் கடையில் துணிகள் வாங்கினார். பின்னர், வாங்கிய உடைக்கு பணம் கொடுப்பதற்காக பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மணிபர்சை பார்த்தபோது, அதை கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி யாரோ திருடியிருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் ராமு புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் துப்புத் துலக்கினர்.
இதில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராமுவின் மணிபர்சை திருடியது திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற தில்சாத்(54) என்பது தெரிந்தது.
தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் சாந்தி மீது 21-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.