க்ரைம்

சென்னை | போதைப் பொருள் கடத்தல்: பொறியாளர்கள் உட்பட 5 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பொறியாளர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையை தடுக்க சென்னை காவல்துறையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு என்ற சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரிவு போலீஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அனைத்து காவல் நிலைய போலீஸாரும் கண்காணிப்பை முடுக்கி விட்டுள்ளனர்.

அதன்படி, அண்ணாசாலை போலீஸார் ஒயிட்ஸ் ரோடு, சுமித் ரோடு சந்திப்பில் நேற்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர். பிடிபட்டவர்கள் வேளச்சேரி விக்னேஸ்வரன் (24), தரமணி பாலச்சந்திரன் (28), கொளத்தூர் யுவராஜ் (25), பெரம்பூர் சுகைல் (24), அம்பத்தூர் பிரவீன் (31) என்பது விசாரணையில்தெரிந்தது.

அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 23 கிராம் மெத்தம்பெட்டமைன், 5.30 கிராம் உயர்ரக கஞ்சா, 2.60 கிராம் வலி நிவாரண மாத்திரைகள், ரொக்கம் ரூ.1.67 லட்சம், 2 எடை மெஷின்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றையும் 5 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்டவர்களில் 4 பேர் அம்பத்தூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பொறியாளராகவும், ஒருவர் வழக்கறிஞராகவும் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 5 பேரையும் கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT