கரூர் அருகே மின் கணக்கீட்டாளரை காரில் கடத்திச் சென்று தாக்கிய விவகாரத்தில், திமுக இளைஞரணி நிர்வாகி உட்பட 4 பேரை வேலாயுதம்பாளையம் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48). கீரம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக பணியாற்றி வருகிறார். இவர், மார்ச் 2-ம் தேதி கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் வாகன நிறுத்துமிடத்தில், தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு காரில் வந்த சிலர், விஜயகுமாரின் முகத்தை மூடி அவரை கடத்திச் சென்று, 4 நாட்கள் ஒரு அறையில் அடைத்து வைத்து தாக்கி பணம் பறிக்க முயன்றுள்ளனர். பின்னர், விஜயகுமாரை மார்ச் 6-ம் தேதி அவர்கள் விடுவித்தனர்.
இதையடுத்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த விஜயகுமார், தான் கடத்தப்பட்டது குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸில் மார்ச் 7-ம் தேதி புகார் அளித்தார்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மாரப்பநாயக்கன்பட்டியை அடுத்த பொம்மபட்டியைச் சேர்ந்த வழக்கறிஞரும், திமுக நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளருமான பிரபு என்ற பிரபாகரன்(35), ரங்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பெருமாள்(50), கரூர் மாவட்டம் வாங்கல் ஈவெரா தெருவைச் சேர்ந்த கார்த்திக்(29), நவீன்குமார்(25) ஆகிய 4 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பின்னர், கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் 4 பேரையும் ஆஜர்படுத்தி, கரூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.