க்ரைம்

சென்னை: அடகு வைத்த நகைகளை மீட்டு தருவதாக ரூ.9.5 லட்சம் அபகரித்த நபர் கைது

செய்திப்பிரிவு

திருவிக நகரில் அடகு வைத்த நகைகளை மீட்டு தருவதாக கூறி ரூ.9.5 லட்சம் பணத்தை அபகரித்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை தி.நகர் சவுந்தர ராஜன் தெருவில் வசித்து வருபவர் கணேஷ் (31). இவர் தங்க நகை செய்யும் தொழில் மற்றும் வங்கியில் ஏலம் விடும் தங்க நகைகளை வாங்கி விற்கும் தொழில் ஆகியவற்றை செய்து வருகிறார். இவருக்கு தனியார் தங்கநகை அடமானம் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நபர் ஒருவர் மூலம் மாதவரத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

இந்நிலையில், ஆனந்தன், தான் பாடியில் உள்ள தனியார் வங்கியில் 300 கிராம் நகைகளை அடமானம் வைத்து கடன் செலுத்த முடியாமல் ஏலத்தில் விட உள்ளதாகவும், அதனை மீட்க பணம் கொடுத்து உதவினால், தனது 300 கிராம் நகையை மீட்டு, அதனை விற்று அதில் பெரும் தொகையை தங்களுக்கு தருவதாகவும் கணேஷிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, ஆனந்தன் வங்கி கணக்குக்கு ரூ.9.5 லட்சம் பணத்தை கணேஷ் செலுத்தியுள்ளார். ஆனால், அவர் சொன்னபடி நகைகளை மீட்டு, கணேஷுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து திருவிக நகர் போலீஸில் கணேஷ் அளித்த புகாரின் பேரில், ஆனந்தனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT