இளைஞரை அடித்துக் கொன்று மூட்டையில் கட்டி வீசிய வழக்கில் அவரது நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கொருக்குப்பேட்டை பிபிசிஎல் சுற்றுசுவர் அருகில் ரத்தக் கறையுடன் இருந்த சாக்கு மூட்டையில் இருந்து கடந்த 5-ம் தேதி துர்நாற்றம் வீசியுள்ளது. தகவல் அறிந்து வந்த கொருக்குப்பேட்டை போலீஸார், மூட்டையை பிரித்து பார்த்தபோது, இளைஞர் ஒருவர் கை, கால் கட்டப்பட்ட நிலையில், ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது. மேலும், சடலம் வைக்கப்பட்டிருந்த மூட்டைக்கு மேல், ரப்பீஸ் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, உடலை கைப்பற்றிய போலீஸார், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், இறந்த நபர், பழைய வண்ணாரப்பேட்டை வீரபத்திர தோட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (24) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணை குறித்து போலீஸார் கூறியதாவது: சதீஷ்குமாரும், கொருக்குப்பேட்டை தியாகப்பா தெருவை சேர்ந்த சரத்குமார் (27) என்பவரும், சிறு வயதில் இருந்தே நண்பர்களாக பழகி வந்துள்ளனர். சரத்குமாருக்கு திருமணமாகி விட்டது. சதீஷ்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், சரத்குமார் வீட்டுக்கு சதீஷ்குமார், அடிக்கடி சென்று வந்தபோது, சரத்குமார் மனைவிக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இது சரத்குமாருக்கு தெரியவந்த நிலையில், அவர் இருவரையும் கண்டித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 3-ம் தேதி சரத்குமார் வீட்டுக்கு சதீஷ்குமார் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த சரத்குமார், வீட்டில் இருந்த ஸ்குரு டிரைவர், கத்தியால் சதீஷ்குமாரை குத்தி கொலை செய்து, உடலை மூட்டை கட்டி, இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்து, பிபிசிஎல் சுற்றுசுவர் அருகில், ரப்பீஸ் மூட்டைகளுக்கு அடியில் மறைத்து வைத்து சென்றுள்ளார் என்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய சரத்குமாரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்த சிறையில் அடைத்தனர்.