க்ரைம்

திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசியவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட இம்தியாஸ் (42) என்பவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலப்பாளையம் நேதாஜி சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில் கடந்த ஆண்டு ‘அமரன்’ திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த நவ. 16-ம் தேதி திரையரங்க வளாகத்தில் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பினர். இந்த வழக்கில் மேலப்பாளையம் அல்அமீன் நகர் யுனைடட் காலனியைச் சேர்ந்த காதுரையா மகன் இம்தியாஸ் (42) என்பவர் கைது செய்யப்பட்டார்.

சமுதாயத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து, அதன்மூலம் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், இவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு, நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் வி.வினோத் சாந்தாராம், மதுரை தீவிரவாத தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குப்புசாமி ஆகியோர் பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின்பேரில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இம்தியாஸ் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT