க்ரைம்

சென்னையில் ‘டிஜிட்டல் கைது’ மூலம் ஓய்வுபெற்ற பெண் பொறியாளரிடம் ரூ.4.67 கோடி பறிப்பு: 15 பேர் கும்பல் கைது

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: டிஜிட்டல் கைது முறையில் மூதாட்டியை மிரட்டி ரூ.4.67 கோடி பணம் பறித்த வழக்கில் 15 பேரை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த 72 வயதான மூதாட்டி ஒருவர் பொறியாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர். இவரது செல்போனுக்கு அண்மையில் அழைப்பு ஒன்று வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் தொலைத் தொடர்பு நிறுவனத்திலிருந்து பேசுகிறோம். உங்களது செல்போன் எண்ணை பயன்படுத்தி பல வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில், கோடிக் கணக்கில் சட்ட விரோத பண பரிமாற்றம் (ஹவாலா) நடைபெற்றுள்ளது.

எனவே, இது தொடர்பாக மும்பை சைபர் க்ரைம் போலீஸார் உங்களிடம் விசாரணை செய்வார்கள் எனக் கூறி இணைப்பை, மற்றொரு நபருக்கு ஃபார்வேர்டு செய்துள்ளார். எதிர்முனையில் காவல் துறை அதிகாரி போன்று ஒருவர் பேசியுள்ளார். அவர் சமூக வலைதள ஆப் ஒன்றை மூதாட்டியின் செல்போனில் பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளார். தொடர்ந்து வீடியோ காலில் போலீஸ் போன்று சீருடை அணிந்து கொண்டு ‘உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளோம். நீங்கள் சட்ட விரோதமாக பண பரிவர்தனை செய்து கோடிக்கணக்கான பணத்தை குவித்துள்ளீர்கள். உங்களை அழைத்துச் செல்ல மும்பை போலீஸார் சென்னை வர உள்ளனர்.

கைது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றால் நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் அனைத்தையும் அனுப்பி வையுங்கள். நாங்கள் ஆய்வு செய்து உங்கள் மீது குற்றம் இல்லை என்றால் உடனடியாக உங்கள் வங்கிக் கணக்குக்கே அனைத்து பணங்களையும் அனுப்பி விடுகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மூதாட்டி தனது நேர்மையை நிரூபிக்க, அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளில் ரூ.4.67 கோடி அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு எதிர்முனையில் பேசிய நபர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் உதவி ஆணையர் பால் ஸ்டீபன், ஆய்வாளர் பீர்பாஷா தலைமையிலான போலீஸார் விசாரணையில் இறங்கினர். இதில், பண மோசடி வெளிநாட்டு கும்பலுக்கு வலதுகரமாக சென்னையைச் சேர்ந்த முத்துராமன் செயல்பட்டது தெரிந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.

இவர் சென்னையில் ஏழ்மை நிலையில் உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து அவர்களுக்கு கமிஷன் கொடுத்து அவர்களது வங்கி எண்களை பெற்று மோசடி கும்பலுக்கு கொடுத்ததும், அக்கும்பல், இந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வங்கி கணக்குக்கு மோசடி பணத்தை அனுப்ப வைத்து, பின்னர் அந்த பணத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இப்படி, இக்கும்பலைச் சேர்ந்த முத்துராமன் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் என அடுத்தடுத்து 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வீட்டிலிருந்து கணக்கில் வராத (ஹவாலா) ரூ.52 லட்சத்து 68 ஆயிரம் பறிமுதல் செய்யயப்பட்டது. மீட்கப்பட்ட பணம் மூதாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT