எபிரி மோசஸ் ஒக்போடோ 
க்ரைம்

சென்னை | 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் போதைப் பொருள் வழக்கில் நைஜீரியாவை சேர்ந்தவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: கொக்கைன் போதைப் பொருள் வழக்கில் 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையை தடுக்க காவல் ஆணையர் அருண் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு என்ற தனிப்பிரிவை உருவாக்கினார்.

அப்பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக சூளைமேடு, அண்ணா நெடும்பாதை மற்றும் ராகவன் தெரு சந்திப்பு அருகே கடந்த ஜனவரி 25-ம் தேதி கண்காணித்தபோது கொக்கைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்த ராயப்பேட்டையைச் சேர்ந்த பயாஸ் அகமது (31), கோயம்பேட்டைச் சேர்ந்த சந்திரசேகர் (35) ஆகிய இருவரை கைது செய்தனர். பின்னர், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் அவர்களது கூட்டாளிகள் மேலும் 3 பேர் கடந்த ஜனவரி 28-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இப்படி அடுத்தடுத்து போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்து விசாரித்ததில் கொக்கைன் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது பெங்களூரு, கட்டஹள்ளி பகுதியில் வசித்து வந்த நைஜீரியா நாட்டை சார்ந்த எபிரி மோசஸ் ஒக்போடோ (30) என்பது தெரிந்தது.

தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீஸார் தற்போது கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT