சென்னை: மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றபோது தப்பிய ரவுடியை போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டை பி.எம். தர்கா பகுதியை சேர்ந்தவர் ரவுடி அண்டா சீனு (27).
இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்ற வழக்கு ஒன்றில் ரவுடி சீனு காவல் நிலையத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவரை கடந்த வெள்ளிக்கிழமை ராயப்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.
அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போலீஸார், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்தனர். அதன்படி, மருத்துவ பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, கழிவறைக்கு செல்வதாக கூறி போலீஸாரிடம் இருந்து ரவுடி சீனு தப்பினார்.
இது தொடர்பாக 2 தனிப்படைகளை அமைத்து ராயப்பேட்டை போலீஸார் தேடி வந்தனர். அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு, வழக்கமாக அவர் தங்கும் இடம் என பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், சீனு நேற்று போலீஸாரிடம் பிடிபட்டார். அவரை மீண்டும் கைது செய்த போலீஸார், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.