சென்னை: தொழில் அதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டிய வழக்கில் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, வெங்கடேஷ் பண்ணையாரின் கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் முகமது சமீர். இவர் லீடர் கேப்பிட்டல் சர்வீஸ் என்ற பெயரில் தனியார் நிறுவனம் நடத்தி அதில், நிர்வாக இயக்குநராக இருந்தார். இவரது நிறுவனத்தில் ஜெய்கணேஷ் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் முதலீடு செய்தார். பின்னர், முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்டபோது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. எனவே, முதலீடு பணத்தை இப்போது திருப்பித்தர இயலாது என முகமது சமீர் தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த ஜெய்கணேஷ் தென்மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேரை அழைத்து வந்து 2003 செப்டம்பர் 13-ம் தேதி முகமது சமீர் நிறுவனத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளார். பின்னர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் காட்டி மிரட்டி ரூ.41.80 லட்சத்துக்கு காசோலை பெற்றுச் சென்றுள்ளார்.
இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். பின்னர், இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதுஒருபுறம் இருக்க இந்த விவகாரம் தொடர்பாக ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டனர். ஒருவர் இறந்து விட்டார். ஒருவரை போலீஸார் என்கவுண்டர் செய்தனர்.
வழக்கு தொடர்பாக குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஜனார்தனன் (70) என்பவர் தலைமறைவானார். அவருக்கு 2008 ஜனவரி 5-ம் தேதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஜனார்தனனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் மறைந்த வெங்கடேஷ் பண்ணையாருக்கும் தொடர்புள்ளது. அவரது கூட்டாளிதான் ஜனார்தனன் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.