ராகுல் காந்தியுடன் ஹிமானி | கோப்புப்படம் 
க்ரைம்

ஹரியானாவில் காங்கிரஸ் இளம் பெண் நிர்வாகியின் உடல் சூட்கேஸில் கண்டெடுப்பு!

செய்திப்பிரிவு

ரோஹ்தக்: ஹரியானாவில் சூட்கேஸ் ஒன்றிலிருந்து காங்கிரஸைச் சேர்ந்த இளம்பெண் நிர்வாகி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள 33 நகராட்சி அமைப்புகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு இந்தச் சம்பவம் நடந்திருப்பது அங்கு புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சூட்கேஸில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உடல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளம் பெண் நிர்வாகியான ஹிமானி நர்வால் என்று அக்கட்சி அடையாளம் காட்டியுள்ளது. இவர் முன்னாள் முதல்வர் பூபேந்திர ஹூடாவின் கோட்டையான ரோஹ்தக்கில் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து பூபேந்திர ஹூடா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இளம் காங்கிரஸ் நிர்வாகி ஹிமானி நர்வால் காட்டுமிராண்டித் தனமான முறையில் கொல்லப்பட்டிருப்பது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்த ஆன்மாவுக்கு எனது அஞ்சலியையும், அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு இளம் பெண் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு, அவரது உடல் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நிலைமை மீது விழுந்த கறையாகும்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார், “பாதிக்கப்பட்டவரின் கழுத்தில் ஒரு துப்பட்டா சுற்றப்பட்டிருந்தது, அவரது கைகளில் மருதாணி பூசப்பட்டிருந்தது. விஜய் நகர் பகுதியைச் சேர்ந்த நார்வால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். நர்வாலின் உடல் உடற்கூராய்வுக்காக ரோஹ்தக்கில் உள்ள பிஐிஐஎம்எஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.” என்றனர்.

கட்சி நிர்வாகியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

ஹரியானா மாநிலம் சோனாபட்டில் உள்ள கதுரா கிரமாத்தைச் சேர்ந்தவரான ஹிமானி நர்வால் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாக இருந்தவர். ரோஹ்தக் எம்பியான தீபேந்திர ஹூடாவுடன் இணைந்து கட்சியின் பல்வேறு நிகழ்வுகளில் நர்வால் பங்கேற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பேரணிகள் மற்றும் சமூக நிகழ்வுகளில் ஹர்யான்வி கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் பிரபலமாக அறியப்பட்டார். அதேபோல், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் அவருடன் இணைந்து பங்கேற்றுள்ளார்.

SCROLL FOR NEXT