க்ரைம்

சென்னை: வீடு புகுந்து தங்கம், வெள்ளி திருடிய 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ஆதம்பாக்கத்தில் வீட்டுக்குள் புகுந்து தங்கம், வெள்ளி நகைகளை திருடிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கண்ணன் (27). இவர் தனது வீட்டையொட்டி பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், கண்ணன், கடந்த 26-ம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் அருகில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார். கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, பெட்டி கடையின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டிக்குள் வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள், பெட்டி கடை வழியாக வீட்டுக்குள் நுழைந்து, வீட்டில் இருந்த 3 கிராம் தங்க கம்மல், 20 கிராம் வெள்ளி காப்பு, செல்போன், ரூ.2 ஆயிரம் பணத்தை திருடி சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கண்ணன் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, வேளச்சேரியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (19), ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரை சேர்ந்த பாலாஜி (19), டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்த வசந்த் (24) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து நகை, பணம், செல்போனை மீட்டு மூவரையும் சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT