கோப்புப்படம் 
க்ரைம்

இறந்துகிடந்தவர் உடலை அகற்றியபோது மர்ம பொருள் வெடித்து 2 போலீஸார் காயம்

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: சிறுமலையில் இறந்து கிடந்தவர் நக்சல் அமைப்பைச் சேர்ந்தவரா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடலை மீட்டபோது டெட்டனேட்டர் வெடித்ததில் 2 போலீஸார் காயமடைந்தனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலைப் பகுதியில் 17-வது கொண்டை ஊசி வளைவு அருகே தனியாருக்குச் சொந்தமான இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. துர்நாற்றம் வீசியதையடுத்து அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் வனத் துறையினர் மற்றும் போலீஸாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் அளித்தனர்.

திண்டுக்கல் தாலுகா போலீஸார் அப்பகுதிக்குச் சென்றபோது, உடல் அருகே டெட்டனேட்டர்கள் மற்றும் வயர்கள் கிடந்தன. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், க்யூபிரிவு போலீஸார் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், புறநகர் டிஎஸ்பி சிபிசாய்சரண் ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர்.

சோதனையின்போது உடல் அருகே கிடந்த டெட்டனேட்டர் வெடித்ததில் போலீஸார் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இறந்தவரின் பாக்கெட்டில் இருந்த செல்போனைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில், இறந்தவர் கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த சாபு என்பது தெரியவந்துள்ளது. அவர் எதற்காக சிறுமலை பகுதிக்கு டெட்டனேட்டரை கொண்டு வந்தார். டெட்டனேட்டர் வெடித்ததால் உயிரிழந்தாரா? நக்சல் அமைப்பைச் சேர்ந்தவரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் எஸ்.பி. பிரதீப் கூறும்போது, "இறந்தவர் குறித்த விவரம் தெரியவந்துள்ளது. அவரது பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

SCROLL FOR NEXT