ஆவடி: அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை - அம்பத்தூர், ஆசிரியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் பாபு (35). ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள பேட்மிண்டன் கிளப்பில் தினந்தோறும் பேட்மிண்டன் பயிற்சியில் ஈடுபட்டு வருவது வழக்கம். அந்த வகையில், வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணியளவில் பேட்மிண்டன் பயிற்சிக்காக தன் மோட்டார் சைக்கிளில் தினேஷ்பாபு சென்று கொண்டிருந்தார். அப்போது, தினேஷ்பாபுவை பின்தொடர்ந்து சென்ற மர்ம கும்பல், அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தினேஷ்பாபுவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.
இந்தத் தாக்குதலில் தலை, முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த தினேஷ்பாபு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே தினேஷ்பாபு உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவலறிந்த அம்பத்தூர் போலீஸார் தினேஷ்பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தினேஷ்பாபு தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.