தென்காசி: ஆலங்குளத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நல்லூரைச் சேர்ந்தவர் சேகர். கூலித் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த செவத்தலிங்கம் என்பவருடன் வேலைக்கு செல்வது வழக்கம். செவத்தலிங்கத்துக்கும், அதே பகுதியைச் சேர்ந்த லிங்கம் என்பவரது மனைவிக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சேகர், செவத்தலிங்கம் ஆகியோருடன், லிங்கத்துக்கு விரோதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 1.8.2015 அன்று இரவு லிங்கம் மற்றும் இவரது நண்பர்கள் குமார், மாங்கா லிங்கம் ஆகியோர் சேகரிடம் தகராறு செய்து, கொலை செய்தனர்.
லிங்கம், குமார், மாங்கா லிங்கம் ஆகிய 3 பேரையும் ஆலங்குளம் போலீஸார் கைது செய்து, தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை நீதிபதி மனோஜ்குமார் விசாரித்து, குற்றம் சுமத்தப்பட்ட லிங்கம் (42), குமார் (42), மாங்கா லிங்கம் (33) ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் எஸ்.வேலுச்சாமி ஆஜராகி வாதாடினார்.