கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் ஓட்டுநர் என 5 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தை ஆட்சியர் மீ.தங்கவேல், காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் பார்வையிட்டனர்.
கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம் குளித்தலை புறவழிச்சாலையில் தனியார் பள்ளி அருகே இன்று (பிப். 26ம் தேதி) அதிகாலை 2.15 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் கோவையில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்ட கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த குளித்தலை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில், உடல்களை மீட்க முடியாததால் முசிறி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 பேரின் உடல்களை மீட்டனர்.
உயிரிழந்த 5 பேரின் உடல்களை மீட்ட குளித்தலை போலீஸார் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் கோவை மாவட்டம் குனியமுத்தூரை சேர்ந்த செல்வராஜ் (50), அவர் மனைவி கலையரசி (45), மகள் அகல்யா (25), மகன் அருண் (22) என்பதும் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோயிலுக்கு சாமி கும்பிட குடும்பத்துடன் காரில் சென்றதும், காரை ஓட்டிவந்த ஈரோடு மாவட்டம் வில்லரசன்பட்டியை சேர்ந்த விஷ்ணுவும் (24) இந்த விபத்தில் உயிரிழந்தது தெரியவந்தது.
விபத்து நடந்த இடம் மற்றும் குளித்தலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடல்களை ஆட்சியர் மீ.தங்கவேல், காவல் கண் காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் பார்வையிட்டனர்.