திருவள்ளூர்: பூந்தமல்லியை அடுத்த காட்டுபாக்கத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு, சென்னையில் நிலம் வாங்க வேண்டி வானகரம், மேட்டுக் குப்பத்தைச் சேர்ந்த வாசு என்பவரை அணுகி உள்ளார். சிவக்குமாருக்கு நிலம் வாங்குவது பற்றிய முன் அனுபவம் இல்லாததை தெரிந்து கொண்டு அவரை ஏமாற்ற வாசு நினைத்தார்.
இதன்படி, வாசு தனக்கு தெரிந்த நபரை சிவக்குமாரிடம் தனது அக்கா என கூறி அவரிடம் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நகராட்சி, 21-வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் 50 சென்ட் நிலம் இருப்பதாக கூறி, ஒரு சென்ட் ரூ.11 ஆயிரம் என்ற அடிப்படையில், அந்நிலத்துக்கு ரூ.5.5 லட்சம் என நிர்ணயம் செய்து, அதனை வாங்கி விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என கூறி உள்ளார்.
இதை நம்பிய சிவக்குமார், வாசு சொன்ன நபருக்கு ரூ.10 லட்சமும், வாசுவுக்கு ரொக்கமாக ரூ.5 லட்சமும் பணம் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை பெற்ற வாசு மேற்படி நிலத்தை சிவக்குமார் பெயரில் பதிவு செய்யாமல் கிரைய ஒப்பந்த உடன்படிக்கையே போட்டுள்ளார். மேலும், வாசு தனது மகன் பிரேம்குமாரை புரோக்கர் என சிவக்குமாருக்கு அறிமுகம் செய்து வைத்து அவருக்கு ரூ.10.60 லட்சத்தை வாசு, சிவக்குமாரிடம் இருந்து வாங்கிக் கொடுத்துள்ளார்.
பின்னர், கோயம்பேட்டில் 51 சென்ட் மனை இருப்பதாகவும், முன்பணம் கொடுத்து கிரைய ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என்றும், அந்த இடத்தை நாம் வாங்கி விற்றால் பெரிய அளவில் லாபம் கிடைக்கும் எனவும் சிவக்குமாரிடம், வாசு கூறி உள்ளார். இதை நம்பிய சிவக்குமார் மேற்கண்ட இடத்தின் உரிமையாளர்கள் கிளாடி, கிளாடியின் கணவர் அண்ணாதுரை, பவர் ஏஜென்ட் ராஜன் மற்றும் இடைத்தரகர் தெய்வமலர் ஆகியோர் சேர்ந்து இடத்தின் விலை ரூ.5.75 கோடி என நிர்ணயம் செய்து ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அதன்படி, முன்பணமாக ரூ.20 லட்சத்தில் ரூ.10 லட்சத்தை அண்ணா துரைக்கும் ரூ.10 லட்சத்தை ராஜனுக்கும், தெய்வமலருக்கு ரூ.12 லட்சமும் சிவக்குமார் கொடுத்துள்ளார். மேலும், மேற்கண்ட இடத்துக்கு பட்டா வாங்க பணம் தேவைப்படுவதாக சொல்லி வாசு, சிவக்குமாரிடம் ரூ.50,000 பெற்றுள்ளார்.
பின்னர், சிவக்குமார் கோயம்பேட்டிலுள்ள மேற்கண்ட இடத்தை விற்க சென்றபோது அந்த இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் என்றும் அதற்கு பட்டா வாங்க இயலாது என்பதும் தெரிய வந்துள்ளது. இதுவரை, சிவக்குமார், வாசு, அவர் சொன்ன நபர்களுக்கு, ரூ.1.19 கோடி பணத்தை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, சிவக்குமார், அளித்த புகாரின் பேரில் சென்னை, வானகரம், மேட்டுக்குப்பம், திருவள்ளுர் தெருவை சேர்ந்த வாசு, மகன் பிரேம் குமார், நெற்குன்றம், நியூ காலனி, பெருமாள் கோயில் 3-வது தெருவை சேர்ந்த அண்ணாதுரை, கொரட்டூர், சாந்தி நகரை சேர்ந்த தெய்வமலர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.