சென்னை: மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த பெயின்டரை கத்தியால் தாக்கி பணம், பைக்கை பறித்துக் கொண்டு தப்பிய ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புளியந்தோப்பு, கன்னிகாபுரம், தாஸ் நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் பெயின்டர் தினேஷ்குமார் (29). இவர், கடந்த 23-ம் தேதி இரவு கன்னிகாபுரம், கன்னியம்மன் கோயில் அருகில் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் தினேஷ்குமாரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர்.
அவர் கொடுக்க மறுக்கவே 3 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி, தினேஷ்குமாரின் தலையில் கத்தியால் தாக்கி அவர் வைத்திருந்த பணம், பைக்கை பறித்துக் கொண்டு தப்பினர். காயமடைந்த தினேஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது புளியந்தோப்பு கன்னிகாபுரம் கார்த்தி (36), அதே பகுதி பி.எஸ். மூர்த்தி நகர் சூர்யா (31), வினோத்குமார் (31) என்பது தெரிந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோர் புளியந்தோப்பு காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் இருப்பதும், கார்த்தி மீது சுமார் 19 குற்ற வழக்குகளும், மற்றொரு எதிரி சூர்யா மீது 6 குற்ற வழக்குகளும் உள்ளது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.