சென்னை: சென்னை அசோக்நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்(24) என்ற இளைஞரும், 16 வயதுடைய சிறுவனும் கடந்த 2019-ம் ஆண்டு 13 வயது சிறுமியை அப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அசோக்நகர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். சிறுவன் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
பிரகாஷ் மீதான வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜராகி வாதிட்டார்.
விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி, ‘‘குற்றம்சாட்டப்பட்ட பிரகாஷ் மீதான குற்றச்சாட்டு அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது’’ எனக்கூறி அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.