பெங்களூரு: பெங்களூருவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்ததாக காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் உள்ள பொம்மனஹள்ளியை சேர்ந்த 17 வயது சிறுமியின் தாய், கடந்த டிசம்பரில் போலீஸில் புகார் ஒன்றை அளித்தார். அதில், 'தனது 17 வயது மகளை அண்டை வீட்டாரான விக்னேஷ் (32) திருமண ஆசைக்காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக' தெரிவித்திருந்தார். இந்த புகாரை விசாரித்த பொம்மனஹள்ளி போலீஸார், விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் பொம்மனஹள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் அருண் தொனெப்பா (37) இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது தாயாருக்கும் உதவுவதாக சந்தித்து பேசினார். இருவருக்கும் அரசு வேலை வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று மயக்க மாத்திரை கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து புகார் அளித்தால், தான் எடுத்து வைத்திருக்கும் நிர்வாண வீடியோக்களை வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி பொம்மனஹள்ளி காவல் நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்பு புகார் அளித்தார். இதை விசாரித்த காவல் ஆய்வாளர் பீமசங்கர், காவலர் அருண் தொனெப்பா மீது போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின்கீழ் பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து காவலர் அருண் தொனெப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.