கரூர்: கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகேயுள்ள அண்ணாவி பூசாரி பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தரகம்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார் இவருக்கும், தரகம்பட்டி மாடல் பள்ளியில் 10-ம் வகுப்புபடிக்கும் மாணவிக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த மாணவர் குறித்து மாணவி இழிவாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அந்த மாணவியின் வீட்டுக்குச் சென்ற மாணவர், அவரை வீட்டுக்கு வெளியே வரவழைத்து கத்தியால் கழுத்தில் குத்தியதுடன், அவர் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியையும் பறித்துக் கொண்டு ஓடிவிட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் பாலவிடுதி போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பிளஸ்2 மாணவரை கைது செய்தனர். இதனிடையே, அந்த மாணவி கூட்டு பாலியல்வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து அறுக்கப் பட்டதாக சில தொலைக்காட்சிகளில் செய்திஒளிபரப்பானது. இதுகுறித்து கரூர் மாவட்டஎஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா கூறும் போது, “மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைசெய்யப்படவில்லை. தவறான தகவல்களை வெளியிடவேண்டாம்” என தெரிவித்தார்.