சென்னை: மைசூரில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு ரயிலில் இளம் பெண்ணின் நகைப் பையை திருடிய வழக்கில், கைது செய்யப்பட்ட காவலரை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். சென்னை சூளைமேடு பாட்ஷா தெருவைச் சேர்ந்த அருண்ராஜ் மனைவி ரேணுகா (30).
இவர் கடந்த 23-ம் தேதி மைசூரிலிருந்து சென்னைக்கு ரயிலில் அதிகாலை பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த ரயில் வாலாஜா ரயில் நிலையம் வந்தபோது அதில் ஏறிய ஓர் இளைஞர், ரேணுகாவின் ரூ. 6 லட்சம் மதிப்பிலான நகைகள் இருந்த கைப்பையை பறித்தார். சுதாரித்துக் கொண்டு எழுந்த ரேணுகா, கைப்பையை தருமாறு கேட்டபோது, அந்த நபர் பையை ரயிலிலிருந்து வெளியே வீசியெறிந்தார்.
அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை ரேணுகா நிறுத்தினார். தொடர்ந்து, திருமுல்லைவாயில் - அம்பத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் அருகே கிடந்த பையை எடுத்துக்கொண்டு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து புகார் செய்தார்.
இதற்கடையில், அந்த நபரை ஆர்பிஎஃப் போலீஸார் பிடித்து, சென்ட்ரல் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபர் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வசந்த குமார் (33) என்பதும், சென்னை ஓட்டேரி காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றும் முதல்நிலை காவலர் என்பதும் தெரியவந்தது.
அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதற்கிடையில், காவலர் வசந்தகுமாரை பணியிடை நீக்கம் செய்து, சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்தார்.