க்ரைம்

ராஜஸ்தானில் சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 5 இளைஞர்கள் கைது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ராஜஸ்தானில் 5 சிறுமிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகளின் தோழிகளையும் தங்கள் ஆசைக்கு இணங்க வைத்த இவர்கள், சிறுமிகளை இஸ்லாம் மதத்திற்கு மாற்றவும் முயன்றுள்ளனர்.

இந்தியாவில் சுமார் 5 கோடி சிறுமிகள் பள்ளிக்கு தனியாக சென்று வருகின்றனர். இதுபோன்ற சிறுமிகளை குறிவைத்து கயவர்கள் நட்புடன் பழகி, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம், ராஜஸ்தானின் அஜ்மீர் அருகிலுள்ள பியாவரில் நிகழ்ந்துள்ளது. பியாவர், விஜய்நகர் காவல் நிலையத்தில் பிப்ரவரி 16-ல் அளிக்கப்பட்ட ஒரு புகார் மீதான விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

பியாவரில் ஒரு மகளிர் பள்ளியில் படிக்கும் டீன் ஏஜ் மாணவி ஒருவருடன் இளைஞர் ஒருவர் நட்பு ஏற்படுத்தி உள்ளார். அந்த சிறுமிக்கு சீன தயாரிப்பு கைப்பேசியை பரிசாக அளித்துள்ளார். பிறகு அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தோழிகளையும் அறிமுகம் செய்யவைக்க வற்புறுத்திய அவர், தன்னுடன் 4 நண்பர்களை சேர்த்துள்ளார். இந்த ஐவரும் இணைந்த பின் மேலும் சுமார் 15 பேருடன் இணைந்து 5 சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

புகார் மீதான விசாரணை பற்றிய செய்தி நாளேடுகளில் வெளியானதை தொடர்ந்து பியாவர் நகர டிஎஸ்பி அலுவலகத்தை உள்ளூர் மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து சுஹேல் மன்சூரி (19), சாஹேல் குரைஷி (19), அர்மான் பட்டான் (19), ரியான் முஹம்மது (20), லுக்மான் (20) ஆகிய 5 குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் முக்கியக் குற்றவாளிகள் சிறுமிகளை இஸ்லாம் மதத்திற்கு மாற்றவும் முயன்றுள்ளனர். இஸ்லாம் மதம் மாறுவதற்கு முன்பாகக் கூறும் கல்மாக்களை சிறுமிகளை கூற வைத்துள்ளனர்.

குற்றவாளிகள் அனைவரும் கல்விக்காக இதுவரை பள்ளிவாயிலை மிதிக்காவதர்கள், கூலிவேலை செய்து பிழப்பவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT