சென்னை: சென்னை: ஹரியானா இளம்பெண்ணிடம் பண மோசடி செய்த கேரள இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் ஹரியானா போலீஸார் கைது செய்தனர். ஹரியானா மாநிலம் கூர்கிராம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஹரியானா போலீஸில் கடந்த ஜனவரி மாதம் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில், ‘புலன் விசாரணை உயர் அதிகாரி என கூறி என்னை செல்போனில் தொடர்பு கொண்ட நபர், நான் கிரிப்டோ கரன்சியை சட்டவிரோதமாக மாற்றியதாக மிரட்டி, என்னிடம் பண மோசடி செய்துவிட்டார். எனவே, அந்த நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, ஹரியானா சைபர் கிரைம் போலீஸார், நடத்திய விசாரணையில், அந்த நபர், கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அகமது நிஷாம்(25) என்பது தெரியவந்தது.
அவரை பிடிக்க போலீஸார் பலமுறை முயற்சி செய்த நிலையில், அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனால், தேடப்படும் குற்றவாளியாக அவரை அறிவித்து, அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் வழியாக எகிப்து செல்ல முயன்ற அகமது நிஷாமை, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பிடித்து, ஹரியானா போலீஸில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து, ஹரியானாவுக்கு அழைத்து சென்றனர்.