நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஜெபக்கூடத்துக்கு வந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த மத போதகர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.
தக்கலை அருகே உள்ள செம்பருத்திவிளையை சேர்ந்தவர் ஜான்ரோஸ் (63). இவர், பெருஞ்சிலம்பு பகுதியில் ஜெபக்கூடம் நடத்தி வருகிறார். அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மனைவி மற்றும் 13 வயது மகள் அடிக்கடி ஜான் ரோஸ் நடத்தி வரும் ஜெபக்கூடத்துக்கு ஜெபம் செய்ய சென்று வந்தனர்.
இந்த நிலையில், சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதியடைந்தார். அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது சிறுமியை மதபோதகர் ஜான்ரோஸ் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியிருப்பது தெரிய வந்தது.
இதுபற்றி அவரிடம் சிறுமியின் பெற்றோர் கேட்ட போது, ஜான் ரோஸ் கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறுமியை பெற்றோருடன் கேரள மாநிலம் கொல்லத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து மருத்துவ சிகிச்சை அளித்துள்ளார்.
சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து மருத்துவமனை நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தது. இதனை தொடர்ந்து ஜான்ரோஸ் தலைமறைவாகி விட்டார். இதுதொடர்பாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு கேரள போலீஸார் புகார் மனுவை அனுப்பி வைத்தனர். அவர்கள் விசாரணை நடத்தி, கோவையில் தலைமறைவாக இருந்த ஜான்ரோஸை கைது செய்தனர். அவரது செயலுக்கு உடந்தையாக இருந்த மனைவி ஜெலின் பிரபா, மகன் பிரதீப் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.