க்ரைம்

ஆன்லைன் வர்த்தகம் மூலம் பள்ளி ஆசிரியையிடம் ரூ.12 லட்சம் மோசடி - தலைமறைவாக இருந்தவர் கைது

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: ஆன்லைன் வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி ஆசிரியையிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த ஶ்ரீபிரியா (37) என்பவர், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அவரது நண்பர் மூலம் சேலம் மாவட்டம், ஆத்தூர், புங்கவாடி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் (40) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவர், சென்னை வடபழனி, அழகிரி மெயின் ரோட்டில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.

தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக சிவகுமார் ஆசை வார்த்தை கூறியதை நம்பி ஆசிரியை ஶ்ரீபிரியா கடந்த 2019ம் ஆண்டு பல தவணைகளாக மொத்தம் ரூ.12 லட்சம் முதலீடு செய்துள்ளார். எனினும், உறுதி அளித்தபடி லாபம் தரப்படவில்லை என்றும் கொடுத்த பணமும் திருப்பித்தரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தான் நடத்தி வந்த ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தை மூடிவிட்டு சிவகுமார் தலைமறைவாகி உள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஶ்ரீபிரியா இது குறித்து 2020ம் ஆண்டு வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். தலைமறைவான சிவகுமார் மற்றும் அவர்களது கூட்டாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

தலைமறைவானவர்களை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றமும் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில், சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகளை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதற்கிடையில், கைதான சிவகுமார் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT