வேலூர்: அணைக்கட்டு அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேர் கொண்ட முகமூடி கும்பல், மூதாட்டியின் கால்களை வெட்டிவிட்டு தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள தேவகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காசி என்பவரின் மனைவி ஜெயலட்சுமி (75). காசி இறந்து விட்டதால் ஜெயலட்சுமி, தனியார் கல்லூரியில் படித்து வரும் பேத்தி ஷியாமளா (21) என்பவருடன் வசித்து வருகிறார். வழக்கம்போல் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 2 மணியளவில் 3 பேர் கும்பல் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். திடுக்கிட்டு எழுந்த ஜெயலட்சுமி, ஷியாமளா ஆகிய இருவரையும் கத்தி முனையில் மர்ம கும்பல் சிறை பிடித்தனர்.
மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் முகத்தில் மாஸ்க்கும் தலையில் குல்லாவும் அணிந்திருந்தனர். அவர்கள் வீட்டில் உள்ள பணம், நகையை கொடுக்காவிட்டால் கொலை செய்துவிடுவோம் என அவர்கள் மிரட்டியுள்ளனர். ஷியாமளாவின் கழுத்தை நெரித்து நகை, பணம் இருக்கும் இடத்தை கூறும்படி ஒருவர் மிரட்டியுள்ளார். அருகில் இருந்த மற்றொரு நபர் ஜெயலட்சுமியின் இரண்டு கால்களிலும் பலமாக வெட்டியுள்ளார். இதில், அலறி துடித்த ஜெயலட்சுமி சுருண்டு விழுந்தார்.
பின்னர், அந்த கும்பல் ஜெயலட்சுமி அணிந்திருந்த ஒன்றரை பவுன் கம்மல்களையும், ஷியாமளா அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர். அதன்பிறகு வீட்டுக்குள் இருந்த இருவரும் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததுடன் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து இருவரும் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் அணைக்கட்டு உட்கோட்ட டிஎஸ்பி சாரதி, அணைக்கட்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுபா மற்றும் காவலர்கள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து தடய அறிவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் மர்ம கும்பலின் கைவிரல் ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிப் பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள செல்போன் கோபுரங்களில் பதிவான செல்போன் அழைப்பு விவரங்களையும், பழைய குற்றவாளிகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. மூதாட்டி ஜெயலட்சுமியின் இரண்டு கால்களிலும் பலமான வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.