சென்னை: டிஜிட்டல் கைது முறையில் ஓய்வு பெற்ற பொறியாளரிடம் ரூ.3.84 கோடி பறிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த சென்னையைச் சேர்ந்த கல்லூரி உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற 80 வயதுடைய பொறியாளர் ஒருவருக்கு அண்மையில் போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர் முனையில் பேசிய நபர், தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து உங்களது ஆதார் அட்டையை பயன்படுத்தி பல கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. எனவே, உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளோம். நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளியேறினால் உங்கள் புகைப்படத்துடன் செய்திகள் பத்திரிகைகளுக்கு கொடுக்கப்படும். மேலும், வெளியே தயாராக நிற்கும் எங்களது தனிப்படை போலீஸார் உங்களை கைது செய்து மும்பை சிறையில் அடைப்பார்கள்.
இதை தவிர்க்க உங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை நாங்கள் கூறும் வங்கி எண்ணுக்கு உடனடியாக மாற்றம் செய்து விடுங்கள். உங்கள் மீது குற்றம் இல்லை என்றால் உங்கள் பணத்தை உங்களுக்கே திரும்ப அனுப்பி விடுவோம் என மிரட்டி உள்ளார். பயந்து போன தொழிலதிபர் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.3.84 கோடியை போலீஸ் என கூறி மிரட்டியவர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பி உள்ளார்.
அதன் பிறகு எதிர்தரப்பை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழில் அதிபர் இது தொடர்பாக மாநில சைபர் க்ரைம் காவல்துறையில் புகார் தெரிவித்தார். அப்பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் தலைமையில், டிஎஸ்பி பிரியதர்ஷினி மேற்பார்வையிலான சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
இதில், தொடர்புடைய 5 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பரசுராமன் (35) என்பவரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். இவர், மோசடி கும்பலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.