க்ரைம்

கோடநாடு சம்பவம்: சிபிஐ உதவியுடன் இன்டர்போலுக்கு சிபிசிஐடி போலீஸார் நினைவூட்டல்

ஆர்.டி.சிவசங்கர்

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின்போது வெளிநாடுகளில் இருந்து 7 முறை செல்போன் மூலம் கனகராஜ் உடன் பேசிய தகவல் பரிமாற்ற விபரங்களை பெற சிபிசிஐடி போலீஸார் சேலம் நீதிமன்றத்தில் இருந்து சிபிஐ உதவியுடன் இன்டர்போல் போலீஸாருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பினர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ம் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. அப்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தனிப்படை போலீஸார் 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து கோடநாடு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. கோவை சிபிசிஐடி கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கட்டங்களாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை உதகையில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (பிப்.21) விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாளையாறு மனோஜ் மற்றும் சயான் ஆகியோர் ஆஜராகினர். சிபிசிஐடி போலீஸார் தரப்பில் கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் மற்றும் டிஎஸ்பி அண்ணாதுரை ஆகியோரும், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோரும் ஆஜராகினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முரளிதரன் வழக்கு விசாரணையை மார்ச் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இது குறித்து அரசு வழக்கறிஞர் ஷாஜகான் பின்னர் நிருபர்களிடம் கூறும்போது, “கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகன விபத்தில் இறந்த முக்கிய குற்றவாளியான கனகராஜ் உடன் வெளி நாட்டில் இருந்து 7 முறை பேசியது யார் என்பதை கண்டறிவதற்காக சிபிசிஐடி போலீஸார் கடந்த ஆண்டே இன்டர்போல் போலீஸாரின் உதவியை நாடினர். ஆனால், இன்டர்போல் போலீஸார் இதுவரை எந்த தகவலும் அளிக்கவில்லை. எனவே, தற்போது சேலம் நீதிமன்றத்தின் மூலம் இன்டர்போல் போலீஸாருக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதம் சிபிஐ போலீஸார் மூலமாக இன்டர்போல் போலீஸாருக்கு அனுப்பபட்டுள்ளது. மேலும், இதுவரை 245 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது,” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT