சென்னை: ஜோலார்பேட்டை சம்பவத்தையடுத்து, ரயில்களின் மகளிர் பெட்டிகளுக்கு அருகே தேவையில்லாமல் சென்றது தொடர்பாக, 889 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
பெற்றோர் மீது கோபம், வெறுப்பு உள்பட பல காரணங்களால், வீட்டை விட்டு வெளியேறி, ரயில் நிலையங்களுக்கு வந்த சிறுவர், சிறுமிகள் மற்றும் வறுமை காரணமாக வேலைக்கு செல்லும் குழந்தை தொழிலாளர்கள் ஆகியோரை மீட்டு, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக பயிற்சி வகுப்பு சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆர்.பி.எஃப் காவலர்கள், தமிழக ரயில்வே காவலர்கள் என மொத்தம் 80 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், தமிழக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் பங்கேற்று, பேசியதாவது: பல்வேறு இடங்களில் இருந்து வீட்டை விட்டு வெளியேறி, ரயில் நிலையங்களுக்கு வந்து தவித்த சிறுவர், சிறுமிகள் உள்பட பலரை மீட்டு வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2,300 பேரை மீட்டு உள்ளோம். 100 பெண்கள் மீட்கப்பட்டு, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
எல்லா ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீஸார் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் ரயில்களின் மகளிர் பெட்டிகள் அருகே தேவையில்லாமல் செல்வோர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை ரயில்வே போலீஸ் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 889 பேர் வழக்குப்பதிவு செய்து உள்ளோம். இதுதவிர, பெண் பயணிகளுக்கு துண்டு பிரசுரம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
மின்சார ரயிலில் அலாரம் ஒலிப்பான் இருக்கிறது. உதவிக்கு, இதை பெண்கள் தொட்டால், இன்ஜின் ரயில் ஓட்டுநருடன் பேசலாம். இதுதவிர, ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் நிறுவ முயற்சி எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.