சென்னை: கொள்ளையடித்த பணத்தை பிரித்துக் கொடுக்க மறுத்த இளைஞரை கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த தரணி (24), அவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த கலைவாணன் (26) ஆகிய இருவரும் கடந்த 2015 மே 14-ம் தேதி ஆந்திராவில் கொள்ளையடித்த பணத்துடன் சென்னைக்கு வந்துள்ளனர். அப்போது, கொள்ளையடித்த பணத்தை பிரித்துக் கொடுக்குமாறு கலைவாணன் கேட்க, தரணி மறுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 2015 ஜூன் 20-ம் தேதி சேப்பாக்கம் எல்லீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த தரணியை, கலைவாணன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக திருவல்லிக்கேணி போலீஸார் வழக்கு பதிவு செய்து கலைவாணன் (26), கேசவன் (24), ராஜேந்திர பிரசாத் (24), விஜி (25), காந்த் (25), முகமது ரஹீம் (24), ஆஷிப் ஜேக்கப் (20), பாபு (19), சந்துரு (25), பாபு (24) ஆகிய 10 பேரை கைது செய்தனர்.
சென்னை 19-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.ராஜ்குமார் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, கலைவாணன் உயிரிழந்துவிட்டதால் மற்றவர்கள் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது. போலீஸ் தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.தனசேகர் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட கேசவன், ராஜேந்திர பிரசாத், விஜி, ஸ்ரீகாந்த், ஆஷிப் ஜேக்கப் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், மற்றவர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளித்துள்ளார்.