சென்னை: ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு உதவுவதுபோல் நடித்து ரூ.48 ஆயிரம் பறித்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (73). இவர் நேற்று முன்தினம் புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் உள்ள பொதுத்துறை வங்கி ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்கச் சென்றார். அவர் ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுக்கத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் முதியவருக்கு உதவுவதுபோல் நடித்து, ஏடிஎம் அட்டையின் ரகசிய எண்ணை (பின்) தெரிந்து கொண்டு வேறு ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்தார். பின்னர், முதியவரிடம் உங்களின் ஏடிஎம் கார்டு செயல்படவில்லை எனக்கூறி அனுப்பி வைத்தார். ராமச்சந்திரன் சென்ற பிறகு அவரது கார்டு மூலம் ரூ.48 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்றார்.
ராமச்சந்திரன் வீட்டுக்குச் சென்ற பிறகு, அவரது செல்போன் எண்ணுக்கு பணம் எடுத்தது தொடர்பான குறுந்தகவல் வந்திருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.