க்ரைம்

ஆத்தூர் அருகே மனைவி, 3 குழந்தைகளை வெட்டிய கணவன் கைது

எஸ்.விஜயகுமார்

சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தனது மனைவி, மூன்று குழந்தைகளை வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரிவாளால் வெட்டப்பட்டதில் இரு குழந்தைகள் உயிரிழந்து விட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கெங்கவல்லியை அடுத்த 74-கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கு தவமணி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் இருந்த நிலையில், கணவன் , மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வித்யா தரணி (13), அருள் பிரகாஷ் (5) உள்பட 3 குழந்தைகள், மனைவி தவமணி ஆகியோர் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், அங்கு சென்று வீட்டில் இருந்த அசோக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் குழந்தைகள் வித்யா தரணி, அருள் பிரகாஷ் ஆகியோர் இறந்துவிட்டது தெரிந்தது. வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த மற்றொரு குழந்தை மற்றும் தவமணி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொலைக்கான காரணம் குறித்து கெங்கவல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தகவல் அறிந்த சேலம் மாவட்ட எஸ்பி., கௌதம் கோயல் கொலை நடந்த இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

SCROLL FOR NEXT