படம்: மெட்டா ஏஐ 
க்ரைம்

சென்னை | பட்​டாக் கத்தி​யுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்த ரவுடி நண்பருடன் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் பட்டாக் கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்த ரவுடி நண்பருடன் கைது செய்யப்பட்டார். அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியில், போலீஸார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோவில் 2 இளைஞர்கள் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து போலீஸார் அவர்களை சோதனையிட்டனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள், அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (19), பல்லாவரத்தைச் சேர்ந்த அலி உசைன் ஷா (21) என்பதும், இருவரும் அந்த ஆட்டோவில் இருந்து பட்டாக் கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரித்தனர். இதில் யுவராஜ் மீது ஏற்கெனவே 6 குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT