சென்னை: குமரன் சில்க்ஸ் ஜவுளிக் கடையில் ரூ.9 லட்சம் திருடப்பட்டது குறித்து மாம்பலம் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
தி.நகர், நாகேஸ்வரா சாலையில் பிரபலமான குமரன் சில்க்ஸ் ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து ஜவுளிக்கடை மூடப்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு கடை மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது, 4-வது மாடியில் இருந்த பால்ஸ் சீலிங் உடைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
தொடர்ந்து அங்கிருந்த கல்லாப் பெட்டியை பார்த்தபோது அது உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.9 லட்சம் திருடப்பட்டிருந்தது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இது தொடர்பாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, மதியம் 12 மணியளவில் காசாளர் அஜித் (47) திருட்டு தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
பணத்தை திருடிவிட்டு தப்பியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி அதன் அடிப்படையில் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னையின் முக்கிய பகுதியில் பிரபல ஜவுளிக்கடையில் பணம் திருடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.