க்ரைம்

மயிலாடுதுறை அருகே 2 இளைஞர்கள் கொலையில் மேலும் 2 பேர் கைது: ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகவல்லி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட முட்டம் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்த சாராய வியாபாரிகளான தங்கதுரை, மூவேந்தன், ராஜ்குமார் ஆகிய 3 பேரும் கடந்த 14-ம் தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரிடம் தகராறு செய்து, கத்தியால் குத்த முயன்றனர்.

அப்போது, அருகில் இருந்த தினேஷின் நண்பர்களான முட்டம் பகுதியை சேர்ந்த ஹரிஷ், அவரது சகோதரர் அஜய், கல்லூரி மாணவரான மயிலாடுதுறை சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த சக்தி ஆகிய 3 பேரும் அதைத் தடுக்க முயன்றபோது, அவர்கள் மீது கத்திக்குத்து விழுந்தது. இதில், ஹரிஷ், சக்தி ஆகியோர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, சாராய வியாபாரத்தை தட்டிக் கேட்டதால்தான் இந்த கொலைகள் நிகழ்ந்ததாக உயிரிழந்தோரின் குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பெரம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சாராய வியாபாரிகள் மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீஸார், இந்த வழக்கில் தங்கதுரை, மூவேந்தன் ஆகியோரின் பெற்றோரான முனுசாமி (47)- மஞ்சுளா (48) தம்பதியையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, இப்பகுதியில் சாராய விற்பனை தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பெரம்பூர் காவல் ஆய்வாளர் மீதும் புகார் கூறப்பட்டது. காவல் ஆய்வாளர் நாகவல்லியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்தும், சுவாமிமலை காவல் ஆய்வாளர் மலைச்சாமியை பெரம்பூர் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்தும் தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT