சென்னை: ரூ.35 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக ஆப்பிள் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் பயாஸ் அகமது (48). வீடு கட்டுமான தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் பயாஸ் அகமது, தான் பெரம்பூரில் கட்டி முடித்த குடியிருப்பிலுள்ள ஒரு இடத்தை, அவரது நண்பர் மூலம் அறிமுகமான திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம், தனக்கர் குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆப்பிள் பழ வியாபாரி ஸ்ரீகிருஷ்ணன் (45) என்பவருக்கு விற்பனை செய்தார்.
அந்த இடத்துக்கான தொகையை ரூ.35 லட்சத்துக்கு காசோலையாகவும், ரூ.11 லட்சத்து 76 ஆயிரத்தை பணமாகவும் ஸ்ரீகிருஷ்ணன் கொடுத்துள்ளார். ஆனால், ரூ.35 லட்சத்துக்கான காசோலையை, வங்கியில் செலுத்தியபோது பணமில்லாமல் திரும்பி வந்துள்ளது. இது குறித்து கேட்டபோது, பின்னர் தருகிறேன் எனக்கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஆனால், பணத்தை கொடுக்கவில்லை.
அதிர்ச்சி அடைந்த பயாஸ் அகமது இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் ஸ்ரீகிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், ஆப்பிள் வியாபாரத்தில் ஸ்ரீகிருண்ணனுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தான் வாங்கிய இடத்தின் பத்திரத்தை ரூ.25 லட்சத்துக்கு வங்கியில் அடமானம் வைத்துள்ளார்.
பின்னர் அந்த பத்திரத்தை மீட்டு ரூ.49 லட்சத்துக்கு வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால், பயாஸ் அகமதுவுக்கு கொடுக்க வேண்டிய ரூ.35 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.