புதுச்சேரி: புதுச்சேரியில் தேவைக்கு அதிகமாக அதிகாரிகள் இருந்தும் அடுத்தடுத்து அரங்கேறிய குற்றச் சம்பவங்களால் மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. புதுச்சேரி பிராந்தியம் 290 சதுர கிலோ மீட்டரும், காரைக்கால் பிராந்தியம் 161 சதுர கிலோ மீட்டரும், மாஹே பிராந்தியம் 20 சதுர கிலோ மீட்டரும் உடையது. புதுச்சேரியில் டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, 5 எஸ்எஸ்பிக்கள், ஐஆர்பிஎன் கமாண்டன்ட், 15-க்கும் மேற்பட்ட எஸ்பிக்கள் என உயர் அதிகாரிகளே 30-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
அதேபோல் தலைமைச் செயலர் உட்பட 13க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும் உள்ளனர். இவர்களுக்கு ஊதியம், வாகனம், பயணப்படி ஆகிய வகையில் அரசு நிதி வெகுவாகச் செலவிடப்படுகிறது. புதுவையில் கடந்த சில மாதங்களாக குற்ற சம்பவங்கள் அரங்கேறி வந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு நகரின் மைய பகுதியில் பாழடைந்த வீட்டில் 3 இளைஞர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
ரவுடிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் நடந்த கொலை சம்பவம் என காவல்துறை தெரிவித்தது. அதேநேரத்தில் நகரின் மையத்தில் நடந்த இந்த சம்பவம் புதுவை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடற்கரை சாலையிலிருந்து இளைஞர்களை கத்தி முனையில் மிரட்டி அழைத்துசென்று சித்ரவதை செய்து கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் அடங்குவதற்கு முன்பே தவளகுப்பம் தானாம்பாளையத்தில் 1ம் வகுப்பு சிறுமியிடம் ஆசிரியர் பாலியல் அத்துமீறல் செய்த சம்பவம் நடந்தது. இந்த புகாரை கொடுக்கச் சென்ற பெற்றோரை போலீஸார் தாக்கியதாக வெளியான தகவல் அடுத்த அதிர்ச்சியை அனைவரிடமும் ஏற்படுத்தியது. மக்களின் போராட்டத்துக்கு பிறகே ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.
இன்னும் அந்த பள்ளியின் தாளாளர், பெற்றோரை தாக்கிய போலீஸார், சம்பவத்தை மூடி மறைக்க முயன்ற காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியறுத்தி வருகின்றனர். அனைத்து மீனவ பஞ்சாயத்து சார்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே திருபுவுனையில் ஒரு வணிக வளாகத்தில் உள்ள ஒரு ஓட்டல் மீது நேற்று இரவு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனாலும், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் சர்வசாதாரணமாக வந்து நாட்டு வெடிகுண்டு வீசி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. தொடர் சம்பவங்களால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
இதுபற்றி பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "புதுவை குற்றவாளிகள், ரவுடிகளிடம் போலீஸார் மீது அச்சமற்ற தன்மை நிலவுவதையே இந்த சம்பவங்கள் காட்டுகிறது. இதுதொடர்ந்தால் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து சட்ட ஒழுங்கு முற்றிலுமாக மீறும். குறிப்பாக நேரம் கடந்து அதிகளவில் திறந்து இருக்கும் ரெஸ்டோபார்கள், திறந்தவெளி பார்களான பல பகுதிகள் தொடங்கி எதிலும் போலீஸார் நடவடிக்கையே எடுப்பதில்லை.
குற்றவாளிகளிடம் தொடர்புடைய போலீஸார் மீதும் நடவடிக்கை தேவை. குற்றச்சம்பவங்கள் மக்கள் அறிவதைத் தடுக்க தினசரி எப்ஐஆர் பதிவேடுகள் தொடர்பான விவரங்களையும் பத்திரிக்கையாளர்களுக்கு முழுமையாக தருவதையும் போலீஸார் தற்போது செயல்படுத்துகின்றனர்.
இதனால் குற்றத்தை குறைக்கமுடியாது. ரோந்து பணியை அதிகப்படுத்தி குற்றவாளிகள், ரவுடிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம்" என்றனர்.