க்ரைம்

வங்கியில் ஊழியர்களை மிரட்டி ரூ.15 லட்சத்துடன் தப்பிய நபர்

செய்திப்பிரிவு

திருச்சூர்: இரண்டரை நிமிடத்தில் வங்கிக்குள் நுழைந்து ஊழியர்களை மிரட்டி ரூ.15 லட்சத்துடன் தப்பிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் போட்டா என்ற பகுதியில் ஃபெடரல் வங்கிக் கிளை அமைந்துள்ளது. இந்தக் கிளைக்கு நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணிக்கு மர்ம நபர் ஒருவர் வந்தார். அப்போது மதிய உணவு நேரம் என்பதால் கிளையில் குறைந்த அளவு ஊழியர்களே இருந்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், கத்திமுனையில் அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி அவர்களை கழிப்பறையில் போட்டுப் பூட்டினார். பின்னர் அங்கிருந்த பணம் வைத்திருந்த அறைக்குச் சென்று அதிலிருந்த ரூ.15 லட்சத்தை எடுத்துக் கொண்டு தப்பினர்.

வங்கியில் நுழைந்த இரண்டரை நிமிடத்தில் அந்த நபர் கொள்ளையடித்துத் தப்பிவிட்டார். அவர் ஊழியர்களை மிரட்டுவது, அறையில் போட்டு அடைப்பது அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து திருச்சூர் ஊரக போலீஸ் எஸ்.பி. கிருஷ்ணகுமார் கூறும்போது, “கொள்ளையடித்த நபர் இந்தியில் பேசியுள்ளார். கேஷ் கவுண்ட்டரில் ரூ.47 லட்சம் இருந்துள்ளது. ஆனால் அந்த மர்ம நபர் மூன்று ஐநூறு ரூபாய் கட்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். அவரை தேடி வருகிறோம்" என்றார்.

SCROLL FOR NEXT