சாகுல் ஹமீது. 
க்ரைம்

சென்னை | போலீஸ் என கூறி வழிப்பறி செய்த வழக்கு: தலைமறைவாக இருந்த கொள்ளையன் கைது

செய்திப்பிரிவு

சென்னை: போலீஸ் எனக் கூறி வழிப்பறியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த வழிப்பறி கொள்ளையன் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுக்காவைச் சேர்ந்தவர் சேது (25). இவர் கடந்த மாதம் 22-ம் தேதி காலை சென்னை பாரிமுனை, வடக்கு கடற்கரை ரயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு நின்றிருந்த 4 நபர்கள் சேதுவை வழிமறித்து நிறுத்தி, தாங்கள் போலீஸ் எனவும் பையை சோதனை செய்ய வேண்டும் எனவும் கூறி சோதனை செய்தனர். பின்னர், அவரிடமிருந்த ரூ.12 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அதை காவல் நிலையத்தில் வந்து பெற்றுச் செல்லுமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

அதிர்ச்சி அடைந்த சேது, பணத்தை வாங்க வடக்கு கடற்கரை காவல் நிலையம் சென்றார். அப்போதுதான், அவரிடம் பணம் பறித்துவிட்டு தப்பியது போலீஸ் அல்ல; வழிப்பறி கும்பல் எனத் தெரியவந்தது. இதையடுத்து, அதே காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

இதில், போலீஸ் எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்டது பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சையது இப்ராஹிம் (51), பார்த்தசாரதி (36), மண்ணடி ரம்ஜான் அலி (38), பல்லாவரம் சாகுல் ஹமீது (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சையது இப்ராஹிம், பார்த்தசாரதி, ரம்ஜான் அலி ஆகிய 3 பேரும் 22-ம் தேதி இரவே கைது செய்யப்பட்டனர். சாகுல் ஹமீது மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில், அவரையும் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT