க்ரைம்

புதுச்சேரியில் முன்விரோதத்தால் பிரபல தாதா மகன் உள்ளிட்ட 3 ரவுடிகள் படுகொலை

செய்திப்பிரிவு

பிரபல தாதா மகன் உட்பட 3 ரவுடிகள் புதுச்சேரியில் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி ரெயின்போ நகர் 7-வது குறுக்குத் தெருவில் உள்ள பழமையான வீட்டில் நேற்று 2 பேர் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தனர். மேலும், ஒருவர் ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த டிஐஜி சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா மற்றும் போலீஸார், காயத்துடன் கிடந்த இளைஞரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். மேலும், இறந்துகிடந்த 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக பெரியகடை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்கள் புதுச்சேரி உழவர்கரை நண்பர்கள் நகரைச் சேர்ந்த ரிஷி(25), திடீர் நகரைச் சேர்ந்த தேவா(25), ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த ஆதி(24) என்பதும், 2008-ல் கொலை செய்யப்பட்ட பிரபல தாதா தெஸ்தானின் மகன் ரிஷி என்பதும், மற்ற இருவரும் அவரது கூட்டாளிகள் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, ரவுடிகளான ரிஷி உள்ளிட்ட 3 பேரின் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கெனவே அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவரின் கொலையில் தொடர்புடையவர்களை கொலை செய்ய இவர்கள் 3 பேரும் திட்டமிட்டுள்ளனர். இதை அறிந்துகொண்ட எதிர்தரப்பினர் மூவரையும் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் விசாரித்து வருகிறோம்" என்றனர்.

SCROLL FOR NEXT