குளித்தலை அருகே போலீஸாரிடம் இருந்து தப்ப முயன்ற ரவுடி கீழே விழுந்ததில் காயமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த கருப்பத்தூரைச் சேர்ந்தவர் சங்கர் என்ற வெட்டு சங்கர்(35). ரவுடி. அதே பகுதியைச் சேர்ந்தர் நாகராஜ். இவர்களிடையே கடந்த 6-ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதில், சங்கர் அரிவாளின் பின்பக்கத்தால் நாகராஜை தாக்கியதில், அவர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார், லாலாபேட்டை காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீஸார் கடந்த 7-ம் தேதி பிள்ளாபாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்த சங்கரை கைது செய்ய முயன்றனர். அப்போது, போலீஸாரிடம் இருந்து தப்ப முயன்ற சங்கர், பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவர் மீது கரூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.