சென்னை: நடத்துநரை பழி வாழிவாங்க அரசு பேருந்தை கடத்திச் சென்ற தனியார் கார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பாரிமுனையிலிருந்து கோவளம் செல்லும் தடம் எண்.109 மாநகர பேருந்து கடந்த 12-ம் தேதி இரவு திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மறுநாள் காலை பார்த்தபோது அந்த பேருந்தை யாரோ திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து கழக ஊழியர்கள் இதுதொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி, காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், மாயமான அரசு பேருந்து சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை ஈஞ்சம்பாக்கத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி நிற்பது தெரிந்தது.
இதையடுத்து, அங்கு விரைந்த போலீஸார் பேருந்தை மீட்டு போக்குவரத்து கழக ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், பேருந்தை திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து கடத்திச் சென்றது சென்னை பெசன்ட்நகரைச் சேர்ந்த ஆபிரகாம் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.
பேருந்தை கடத்தியது ஏன்? - “கார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறேன். பணி முடிந்து தினமும் பாரிமுனையிலிருந்து கோவளம் செல்லும் எண்.109 பேருந்தில்தான் வீடு செல்வேன். அண்மையில் அந்த பேருந்து நடத்துநருக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. என்னை அவர் திட்டிவிட்டார். இதனால், எனக்கு கோபம் ஏற்பட்டது. சம்பவத்தன்று நடத்துநர் என்னை திட்டியது நியாபகம் வந்தது. அதை நினைத்தே மது அருந்தினேன்.
திருவான்மியூர் பேருந்து நிலையம் சென்றபோது என்னை திட்டிய பேருந்து நடத்துநர் பணி செய்யும் பேருந்து, திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அதில், சாவியும் இருந்தது. இதையடுத்து, அந்த பேருந்தை கடத்தி, இசிஆர் சாலை வழியாக சென்றேன். ஈஞ்சம்பாக்கம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது தவறுதலாக மோதிவிட்டேன். இதனால், பயம் ஏற்பட்டு பேருந்தை அங்கேயே நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்து விட்டேன். ஆனால், போலீஸார் என்னை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்,” என்று ஆபிரகாம் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.