க்ரைம்

திருச்செந்தூர் அருகே செட்டாப் பாக்ஸ், சிகரெட், புளி பறிமுதல்: இலங்கைக்கு கடத்தும் முயற்சி முறியடிப்பு

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.75 லட்சம் மதிப்பிலான செட்டாப் பாக்ஸ், வெளிநாட்டு சிகரெட், குழம்பு புளி ஆகியவற்றை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து கடல் வழியாக அத்தியாவசிய பொருட்கள் இலங்கைக்குக் கடத்தப்படுவது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாகத் தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளிலிருந்து இலங்கைக்குப் போதைப் பொருட்களுடன், அத்தியாவசிய பொருட்களும் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களுக்கு, தமிழ்நாட்டில் விற்கப்படும் விலையைவிடப் பல மடங்கு விலை கிடைப்பதால் சில கும்பல் தொடர்ந்து இந்த கடத்தலில் ஈடுபட்டு வருகின்றது.

இதனால் கடலோர பகுதிகளில் கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், கியூ பிரிவு போலீஸார், சுங்கத்துறையினர், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் போன்ற பல்வேறு துறையினர் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாகக் கடத்தல் பொருட்கள் தொடர்ந்து பிடிபட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன் பட்டினம் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் மற்றும் போலீஸார் வீரபாண்டியன்பட்டினம் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இன்று (பிப்.13) அதிகாலை 4.30 மணியளவில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகில் சிலர் பார்சல்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் படகில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.

போலீஸார் அந்த பகுதியில் சோதனை செய்த போது தலா 30 கிலோ எடை கொண்ட 15 மூட்டைகளில் குழம்பு புளி, இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட 1 லட்சம் மான்செஸ்டர் சிகரெட், 295 சன் டிடிஎச் எச்டி செட்டாப் பாக்ஸ் பார்சல், 100 டிஸ் டிவி ஸ்மார்ட் செட்டாப் பாக்ஸ் ஆகியவை இருந்தன. இவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.75 லட்சம் என போலீஸார் தெரிவித்தனர். இவற்றை படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக கியூ பிரிவு போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT