கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே வீட்டில் புகுந்து விவசாயியை தாக்கி, 22 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த தண்ணீர்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுந்தரேசன் (55). இவரது மனைவி மஞ்சுளா(50). இவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில், வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து சத்தத்தை கேட்டு எழுந்த சுந்தரேசன் கதவைத் திறந்த போது, முகமூடி அணிந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.
மேலும், அதிர்ச்சியடைந்த சுந்தரேசன் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து மர்ம நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தரேசனை தாக்கியதில் அவருக்கு கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. அப்போது வெளியே வந்த அவரது மனைவி மஞ்சுளாவையும் முகமூடி அணிந்த நபர்கள் கத்தியை காட்டியும் மிரட்டினர். பின்னர், 2 பேரையும் கத்தி முனையில் மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த மற்றும் வீட்டில் இருந்த 22 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டனர்.
மேலும், வீட்டில் வைத்திருந்த ரூ 50 ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளையடித்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இக்கொள்ளை சம்பவத்திற்கு முன்னதாக, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வீட்டின் மின் இணைப்பு மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் இணைப்புகளை துண்டித்துள்ளனர்.
மேலும், கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த சுந்தரேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பர்கூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கொள்ளைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி எஸ்.பி தங்கதுரை, பர்கூர் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்களை பிடிக்க ஊத்தங்கரை மற்றும் பர்கூர் டிஎஸ்பி-க்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பர்கூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.