க்ரைம்

சென்னை | நகை கண்காட்சியில் காட்சிப்படுத்துவதாக கூறி ரூ.8 கோடி தங்க நகைகளை பெற்று வியாபாரிகளிடம் மோசடி

செய்திப்பிரிவு

சென்னை: மும்பை நகை கண்காட்சியில் காட்சிப்படுத்துவதாக கூறி, ரூ.8 கோடி மதிப்பிலான தங்க நகைகளை வியாபாரிகளிடம் பெற்று நூதன நகை மோசடியில் ஈடுபட்ட சகோதரர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, பூக்கடை, என்.எஸ்.சி. போஸ் சாலை பகுதியில் நகைக்கடை நடத்தி வரும் மக்கி பால் ஜெயின் உட்பட 5 பேர் யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில், ``என்.எஸ்.சி. போஸ் சாலையில் நகைக் கடை வைத்திருக்கும் சகோதரர்களான முகேஷ், மோனிஷ், சுனில் ஆகிய 3 பேரும் கடந்த ஜனவரி 4-ம் தேதி எங்களை அணுகினர்.

மும்பையில் நகைக் கண்காட்சி நடைபெறுகிறது. அதில், நகைகளை காட்சிப்படுத்தவுள்ளோம். நீங்கள் நகைகளை கொடுத்தால் அதில் விற்பனையாகும் நகைக்கான பணத்தை பெற்று கொடுக்கிறோம். மேலும், விற்பனை ஆகாத நகைகளை மீண்டும் திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என உறுதி அளித்தனர்.

அவர்கள் நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் இந்த வியாபாரத்துக்கு நாங்கள் ஒப்புக் கொண்டோம். இதையடுத்து, 5 பேரும் ரூ.8 கோடி மதிப்பிலான 12 கிலோ நகைகளை சகோதரர்கள் 3 பேரிடமும் கொடுத்தோம். ஆனால், கண்காட்சி முடிந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் நகைகளை திருப்பித் தரவில்லை. அதற்குண்டான பணத்தையும் தர மறுத்து ஏமாற்றுகின்றனர்.

மேலும், மிரட்டலும் விடுக்கின்றனர். எனவே, அவர்களிடமிருந்து எங்களது நகைகளை பெற்றுத் தந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என அதில், குறிப்பிட்டு இருந்தனர். இந்த விவகாரம் குறித்து யானைக்கவுனி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT