சென்னை: காதலியை திட்டியதால், ஆத்திரத்தில் காதலியின் தாயாரை கழுத்தை நெரித்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
முகப்பேர் கிழக்கு சர்ச் சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி மைதிலி(63). கணவரைப் பிரிந்து மகள் ரித்திகா (24) உடன் வசித்து வருகிறார். ரித்திகா, போரூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
3 ஆண்டு காதல்: இவர், முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகர் பகுதியில் தங்கியிருக்கும், தன்னுடைய கல்லூரியில் படித்த ஜூனியர் மாணவரான ஷியாம் கண்ணன்(22) என்பவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஷியாம் கண்ணன் அவ்வப்போது ரித்திகா வீட்டுக்கு வந்துள்ளார். இது அவரது தாயார் மைதிலிக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரித்திகா, காதலன் ஷியாம் கண்ணனுடன் வீட்டுக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த மைதிலி, மகள் ரித்திகாவை திட்டியதோடு, வீட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளார். அப்போது, மைதிலிக்கும் ஷியாம் கண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆத்திரம் அடைந்த ஷியாம் கண்ணன், மைதிலியை கீழே தள்ளி. அவரது கழுத்தை நெரித்துள்ளார். இதில், மைதிலி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். பின்னர், இந்த விவகாரம் குறித்து ஷியாம் கண்ணனே போலீஸுக்கு தகவல் அளித்துள்ளார். உடனடியாக சம்பவம் இடத்துக்கு வந்த ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய போலீஸார், மைதிலி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஷியாம் கண்ணனையும் கைது செய்தனர்.
விசாரணையில், ஷியாம் கண்ணன் விருதுநகர் மாவட்டம், சிவகாசி, ரிசர்வ் லைன் கோபுரம் காலனியைச் சேர்ந்தவர் என்பதும், பட்டப்படிப்பு முடித்து, முகப்பேர், கோல்டன் ஜார்ஜ் நகர் பகுதியில் தங்கிருந்து அங்குள்ள தனியார் ஐஏஎஸ் அகாடமியில் போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.